நவதந்திரக் கதைகள்

சுப்பிரமணிய பாரதி

முன்னுரை

வேதாரண்யம் என்ற ஊரில் விவேக சாஸ்திரி என்றொரு பிராமணன் இருந்தார். அவருக்கு மூன்று பிள்ளைகள், அந்த மூன்று பிள்ளைகளையும், மனைவியையும் வைத்துக் காப்பாற்றுவதற்குப் போதுமான நன்செய் நிலம் அவருக்கு இருந்தது. ஆனால் பிள்ளைகள், மூவருக்கும் விவாகமாய்த் தலைக்கு ஓரிரண்டு குழந்தைகளும் பிறக்கவே, குடும்பம் மிகப் பெரிதாகிவிட்டது. ஆதலால், அவருடைய முதுமைப் பிராயத்தில் ஜீவனத்துக்கு சிரமமுண்டாய்விட்டது. பிள்ளைகளுக்கு ஸம்ஸ்க்ருதப் படிப்புச் சொல்லி வைத்து ஒருவனை வேதாந்த சாஸ்திரத்திலும், மற்றொருவனை வியாகரணத்திலும், மூன்றாமவனைத் தர்க்க சாஸ்திரத்திலும் தேர்ச்சியோங்கும்படி செய்து வைத்திருந்தார். கால நிலைமையால், அந்த வித்தைகள் வயிற்றுப் பிழைப்புக்குப் பயன்படவில்லை. பிறரிடம் பிச்சை கேட்க சம்மதமில்லாத மானமுள்ள குடும்பத்தா ராதலால், அரை வயிற்றுக்கு ஆகாரம் செய்து கொண்டு கஷ்டத்திலிருந்தார்கள். இப்படியிருக்கையில், ஒரு நாள் விவேக சாஸ்திரி தமது கையில் தாதுவைப் பார்த்து இன்னும் ஒரு வருஷத்துக்கு மேலே தம்மால் ஜீவிக்க முடியாதென்று தெரிந்தவராகித் தம்முடைய மக்களை அழைத்துப் பின்வருமாறு சொல்லலானார்:—

“வாரீர், மக்களே, நான் சொல்லப் போவதை சாவதானமாகக் கேளுங்கள். என்னுடைய ஜீவன் இவ்வுலகத்திலே இன்னும் ஒரு வருஷத்துக்கு மேலே நில்லாது. நான் உங்களுக்கு அதிகச் செல்வம் வைத்து விட்டுப்போக வழியில்லாமற் போய்விட்டது. விதிவசமாக ஏற்பட்ட மதிமயக்கத்தால், உங்களுக்கு லௌகிக லாபங்கள் உண்டாகக்கூடிய வித்தைகள் கற்றுக் கொடுக்கத் தவறிவிட்டேன். உங்களுக்கோ குடும்ப பாரம் ஏற்கெனவே மிகுதியாய் விட்டது; இன்னும் காலம் போகப் போக இதனிலும் அதிகப் படக்கூடும். நீங்கள் எப்படி இந்தச் சுமையைப் பொறுக்கப் போகிறீர்களென்பதை நினைக்கும்போது எனக்குக் கவலையுண்டாகிறது. ஆயினும், லெளகிக தந்திரங்களை நீங்கள் தெரிந்து கொள்ளும் பொருட்டுச் சில கதைகள் சொல்லி விட்டுப் போகிறேன். தினந்தோறும் விளக்கு வைத்தவுடனே என்னிடம் சிறிது நேரம் கதை கேட்க வாருங்கள். எனது காலத்துக்குப் பிறகு உங்களுக்கு இந்தக் கதைகள் பயன்படும்” என்றார். அப்படியே, பிள்ளைகள் சரியென்று அங்கீகாரம் செய்து கொண்டனர். பிள்ளைகளிலே மூத்தவன் பெயர் வாசு தேவன். இரண்டாமவன் பெயர் காளிதாஸன், மூன்றாவது பிள்ளைக்கு ஆஞ்சநேயன் என்று பெயர்.

பயனறிதல்

அன்று மாலை மூன்று பிள்ளைகளும் சந்தி ஜபங்களை முடித்துக்கொண்டு, பிதாவிடம் வந்து நமஸ்காரம் செய்து விட்டுக் ‘கதை‘ கேட்க வந்திருக்கிறோம் என்றார்கள். விவேக சாஸ்திரி தம் பிள்ளைகளை அன்புடன் உட்காரச் சொல்லி ”குழந்தைகளே! நமது குலதேவதையாகிய காசி-விசாலாக்ஷியை ஸ்மரித்துக் கொள்ளுங்கள்” என்றார். அப்படியே மூவரும் கண்ணை மூடிக் கொண்டு சிறிது நேரம் தியானம் செய்து முடித்தார்கள். பிறகு பிதா கதை சொல்லத் தொடங்கினார்:—

”கேளீர், மக்களே! ஒரு காரியம் தொடங்கும்போது அதன் பயன் இன்னதென்று நிச்சயமாகத் தெரிந்துகொள்ள வேண்டும். அந்தப் பயன் நமக்கு வேண்டியதுதானா என்பதையும் ஆராய்ந்து செய்யவேண்டும். பயன்படாத காரியத்திலே உழைப்பவன் சங்கீதம் படிக்க போன கழுதை போலே தொல்லைப் படுவான்” என்றார்.

”அதெப்படி?” என்று பிள்ளைகள் கேட்டார்கள்.

சங்கீதம் படிக்கப்போன கழுதையின் கதை

பிதா சொல்லுகிறார்:—

பொதிய மலைக் காட்டிலே, ரஸிக சிரோமணி என்றொரு கழுதையிருந்தது. அது புல்லாந் தரைகளிலே மேய்ந்து நன்றாகக் கொழுப்படைந்து வருகையில் வசந்த காலத்தில், ஒருநாள் மாலை, ஒரு மாமரத்தின் பக்கமாகப் போகும்போது, கிளையின்மேல் மதுகண்டிகை என்றதோர் குயில் பாடிக் கொண்டிருந்தது. அதை ரஸிக சிரோமணி சிறிதுநேரம் நின்று கேட்டது. குயிலின் பாட்டு மனோகரமாக இருந்தது. அந்தப் பாட்டிலே கழுதை மயங்கிப்போய் மதுகண்டிகையை நோக்கிச் சொல்லுகிறது:— ”பெண்ணே, உன்பாட்டு எனக்குப் பரவச முண்டாக்குகிறது. ஆகா! சங்கீதத்தின் இன்பமே இன்பம்! உனது குரல் சன்னமானது. நமக்குக் கனத்த சாரீரம். உனக்குள்ள பயிற்சியும் திறமையும் நமக்கிருந்தால் மிகவும் நன்றாக இருக்கும். காட்டிலுள்ள மிருகங்களெல்லாம் கேட்டு வியப்படையும். சிங்கராஜா நம்மை சமஸ்தானத்து வித்வானாக நியமனம் செய்வார். ‘இந்தக் காட்டிலுள்ள புல்லாந்தரைகளிலே ரஸிக சிரோமணி ஒருவன்தான் மேயலாம். மற்ற எந்த மிருகமும் மேயக் கூடாது’ என்று கட்டளை பிறப்பித்துவிடுவார். பிறகு நமக்கு யாதொரு வேலையு மேற்படாது. நமது நிலைமை மிகவும் கொண்டாட்டமாய் விடும்.”

இவ்வாறு ரஸிக சிரோமணி மேன்மேலும் சொல்லிக் கொண்டு போவதைக் கேட்டுக் குயில் சிரிப்புடன் :— ”கேளாய், ரஸிகமாமா, உனக்கு இந்தத் தொழில் வர மாட்டாது. வீணாக மனோராஜ்யம் பண்ணுவதிலே பயனில்லை” என்றது.